Showing posts with label Thamizh. Show all posts
Showing posts with label Thamizh. Show all posts

Sunday, February 6, 2011

நீண்ட பயணமும் ஒரு நிழற்சாலையும்!

வெவ்வேறான நமது பயணங்களில்
நாம் இணைந்து கடக்கும் இந்த நிழற்சாலை
இன்னும் கொஞ்சம் நீண்டால் என்ன?

முக்கால் உண்மையாய் மீதம் போலியாய்
தொடர்கிறேன் நான்
என்னுள் நிஜத்தை மட்டும் ப்ரதிபலிக்கும்
நிலைக்கண்ணாடி நீ

இளகிக் கரையும்,
பொய்மையில் உறைந்த இதயம்,
உன் உண்மையின் வெப்பத்தில்.

பாசம் பரிவு அக்கறை தோழமை...
அதனினும் உன்னதம்,
நீ நிஜம்!

அரிதாரம் சூடாத உன் பேச்சின் பற்றுதலில்..
அதிகாரமான அன்பில், அரவணைப்பில்
வேகம் கூட்டித் நகர்கின்றது என் யாத்திரை

இந்தச் சாலைக் கடக்கப்படும் -
உன் துணையோடு!

தொடர்ந்து கொண்டே இருக்கும் என் முடிவறியா யாத்திரை...
மீண்டும் ஒரு நிழற்சாலைக் கடந்தபடி..

என் பயணம் மீண்டும் தளரக்கூடும்!
என் தனிமை என்னைத் தின்னக்கூடும்!
உண்டு உயிர்த்து உறங்கி நடந்து
விழித்து களைத்த பொழுதுகளெல்லாம்
நிஜங்களைத் தேடி அலையக்கூடும்..

அன்றும் உன்னை நினைத்துக் கொள்வேன்
என் விழிகளைக் கொஞ்சம் நனைத்துக் கொள்வேன்

Tuesday, June 8, 2010

கன்னித் தமிழ்

இமைகள் நயம்
பார்வை பொருள்கோள்
நாசித் தளை
உதடுகள் எதுகை
கன்னக்குழிக் கவிதை
தனம் இயற்சீர்
இடையோ இல்பொருள்
கேசம் நெடில்
விரல்கள் அணி
நீ மட்டுமே மெய்
நீயே என் உயிர்!

Wednesday, February 3, 2010

நிறையாத கோப்பை!

அமாவாசை நாளின்
இரண்டான் ஜாமத்தில்
இணய மறுக்கும் இமைகள்!

நீர்த்துப்போன உரைகற்களின் ஊடே
சிதறிக் கிடக்கும் ஒளிக் கூறுகளால்
சித்திரச் சுவராகிறது என் சாளரம்!

நிஸப்தத்தைக் கிழித்துக்கொண்டு
உனக்கும் எனக்குமான
தூரத்தைத் தின்றபடி
விரைந்து கொண்டிருக்கிறது
ஒரு பறவை!

வாசிப்பின் ஸ்வாரஸ்யத்தில்
எழுத மறந்துவிட்ட,
ரசனையின் விஸ்தரிப்பில்
விமர்சிக்கத் தவறிவிட்ட
யாருக்கும் தெரியாத
ரகசிய வாசகன்
நான்!!!

நீயென்ற ஒற்றைக் கிளையில்
விரும்பி மாட்டிக்கொண்ட,
மனக் குரங்கு
வேண்டி அழுவது
வீடா? விடுதலையா?

ஆடுகளத்தில் நீயே
எதிரியும் பந்தயமுமாய் இருக்க - எப்படி
ஒன்றை வெறுத்து மற்றொன்றை நேசிக்க?

நீயென்னை நிராகரிக்கும் பொழுதுகளில்
எனக்கு ஏன் தேவை இல்லாமல்,
கடவுள் மேல் கோபம் வருகிறது?

Monday, September 14, 2009

வாழ்க்கை

அலை அடித்து துவைத்ததில் சாயம் போயிருக்கிறது என் சட்டை!
கறையில் நிற்பவர்கள் சிரிக்கிறார்கள்....
கையில் ஸமோஸாவுடன்!

என் உள்ளங்கையில் இருக்கிப் பிடித்திருக்கிறேன்
இரண்டு முத்துக்களை!

கொஞ்ச நேர பெருமைக்குப் பின் பசி எடுக்க - இதோ...
முத்துக்களை விற்று ஸமோஸா வாங்கப் பொகிறேன்

அங்கேச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள்...
எதனை விற்று ஸமோஸா வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது!