Friday, June 18, 2010

நண்பர்கள்!

மாலே! மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச ஜன்னியமே...

மேலை சித்திர வீதியின் முகப்பில் சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் பாசுரம் முழங்க கண்ணைப் புரட்டி விழிக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் காவிரி வெள்ளத்தின் ஜிலீர் சப்தத்தைக் ஊமையாய் அடித்தப்படி பேரிரைச்சலுடன் வந்து நிற்கும் கூடல்.

அந்த மின்தொடர் வண்டியில் தான் அநேகமாக சேஷாத்ரி பயணப்படப் போகிறான். நேற்றே என்னைக் கண்டு பேசிவிட்டுத் தான் புறப்பட்டான். அதிக நேரம் உரையாட முடியவில்லை. இன்று காலையில் எப்படியும் அவன் புறப்படுமுன் பார்க்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஞாயிற்றுக் கிழமை சற்று அதிகம் தூங்கி விட்டேன். இன்னேரம் அந்த ரயில் நிலைய விடுதியில் வடையைத் தின்றுவிட்டு S4 இல் ஏறியிருப்பான்.

சமீப காலமாக எங்களுக்குள் சுமுகமில்லை. வாக்கு வாதங்கள் நிறைய ஏற்படுகிறது. அவனுக்கு எதிராக நான் வீம்புக்கென்றே செயல் படுவதாக ஊருக்குள் புலம்பி வைத்திருக்கிறான். எனக்கு விளக்கம் சொல்ல எப்பொழுதும் நேரம் இருப்பதில்லை.

ஆயிரம் பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. வேலை அப்படி. நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் நான் இவனை நிராகரிப்பதாக நினைக்கிறான். இதற்கு ஒரு முடிவு கட்டவே இவனை இந்த வாரம் வீட்டுக்கு அழைத்தேன். வந்தவன் வந்தான்... சட சட வென பத்துக் கேள்விகளை கேட்டுவிட்டுச் சென்றுவிட்டான். இத்தனைக்கும் என் தவறும் இருக்கிறது. நேற்றும் கொஞ்சம் வேலை அதிகம். கோபித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான்.

ஆனால் என்னைக் கண்டதில் அவனுக்கு இருந்த ஆனந்தத்தை அவன் கண்ணிலே நான் பார்த்துவிட்டேன். எனக்கும் தான். ஆனால் அவன் அதை கவனித்திருக்க மாட்டான்.

கோபம் அவனைக் குருடனாக்கி இருக்கும்...

தொடரும்...


Tuesday, June 8, 2010

கன்னித் தமிழ்

இமைகள் நயம்
பார்வை பொருள்கோள்
நாசித் தளை
உதடுகள் எதுகை
கன்னக்குழிக் கவிதை
தனம் இயற்சீர்
இடையோ இல்பொருள்
கேசம் நெடில்
விரல்கள் அணி
நீ மட்டுமே மெய்
நீயே என் உயிர்!