Wednesday, May 6, 2009

தமிழுக்கு வந்த தலைவலி! - பாகம் 1

"ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ் சொற்கள் அறிய இங்கு எழுதுங்கள்"
என்று அறிவிக்கின்றது மொழிபெயர்ப்பு இணையதளம்
.ஆங்கில தட்டுப்பலகை தமிழருவியின் பாய்ச்சலை கொஞ்சம் கட்டுப்படுத்ததான் செய்கிறது. எழுத நினத்த தருணங்களெல்லாம் தமிழ் தட்டிப் பழகாத விரல்களின் வலியை எண்ணி வீணாய் கழிகின்றது! சில நேரங்களில் எழுதுபொருள் தரும் உந்துதல் தமிழ் பதிவு படைக்க உதவுகிறது. சிவகாமியின் சபதம் பற்றிய எனது கருத்துரை தமிழில் ஏன் இல்லை என்று கேட்டோருக்கான விடை கூட இதுதான். எனக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருப்பது தீதோ நன்றோ? தெரியாது.இந்தப் பதிவை தமிழில் புனைவதற்கான உந்துதல் எனது கவிதைகள். இன்றளவும் எனக்கு படித்தவரோடும் பண்பட்டவரோடும் கலந்துரையாடும் வாய்ப்பினைப் பெற்றுத் தருபவை அவைகள் தாம்.

எனது கவிதை அனுபவங்களைப் பற்றிய இந்தப் பதிவினை பல பாகங்களாக எழுத எத்தனித்துள்ளேன். எனது வாழ்வின் ஸ்வாரஸ்யமுள்ள பல சம்பவங்களோடு எனது கவிதைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்பதாம் வகுப்பின் ஒரு நவம்பர் மாதத்து மேகம் மூடிய மாலைப் பொழுதின் கடைசி பாடவேளையை தவிற்க அன்று நடந்த தமிழ் கவிதை போட்டிக்கு, இலக்கணம் அறியாத, கவிதை வாஸம் சிறுதுமில்லாத ஒரு ஞானஸூன்யமாகிய நான் சென்றது கடுங்குற்றமென்றால் அந்த ஆண்டின் மேநிலைப் பிரிவின் தலைசிறந்த கவிஞனாக என்னை தேர்ந்தெடுத்து அறிவித்தது எனது பள்ளி செய்த பெருங்குற்றம். அந்த பாவத்தின் பலனைத் தான் இன்றும் எனது தோழர்களும், தோழியரும், பெற்றவரும், கற்றவரும் பின் மற்றவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்
.

"இந்தக் காதல விட்டொழிக்கவே மாட்டியா?" பெரும்பாலான எனது கவிதைகளை படித்து விட்டு பெரும்பாலான ஆர்வலர்கள் அடிக்கடி எழுப்பும் கேள்வி. முயற்சி பண்றேங்க... என்று நான் சொல்வது எப்போதாவது தான் மெய்படுகிறது. அதன் பின் ஒரு பெருங்கதை உண்டென்பது சிலருக்கேத் தெரியும்.


"நீலவான ஆடைக்குள் உடல் மறைத்து
நிலவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுதும் காட்டிவிட்டால்
காதல் கொள்ளயிலே இவ்வுலகம் சாமோ?"
என்ற பாரதிதாசனின் பாடல் நிலவை என்றும் காதலோடும் காதலியோடும் ஒப்பிடவே எனக்கு கற்றுக் கொடுத்திருந்தது.

"என்னருமைக் காதலிக்கு நீ இளையவளா இல்லை மூத்தவளா?"
என்று நிலாவை வம்புக்கிழுத்த கண்ணதாசனும் என் இந்த போக்குக்கு உடந்தை.

என்னிடம் இயற்கையை பற்றிய ஒரு கவிதையைப் பெற்று விட எண்ணி, ஒன்றும் பிடிபடாமல், நிலவை வெகு நேரம் உற்று நோக்கிய பொழுது, பக்கத்தில் திடீரென்று தோன்றியது ஒரு அழகிய பெண்ணின் உருவம். அந்த கற்பனை பிம்பத்திடம் தான் இன்று கவிதை சொல்லியாக வேண்டும்.

"அதோ பார் கண்ணே.. இன்னுமோர் சந்திரோதயம்!
கொடுத்து வைத்த பூமிக்கு இன்று இரட்டை பௌர்ணமி"
என்று தோன்றிய இரண்டு வரிகள் நான் திருத்த முடியாத ஜன்மம் என்பதை ஒரக்க அறிவிப்பதாகத் தோன்றியது.

ஏன் இந்தக் கடிவாளம் கட்டிய குருகிய சிந்தனை..?

அடுத்தப் பதிவில்...