Friday, July 17, 2009

தமிழுக்கு வந்தத் தலைவலி - பாகம் 2

அப்பொழுது நாங்கள் எட்டாவது படித்துக்கொண்டிருந்தோம். அதிக அளவில் தமிழ் சினிமா பார்க்க வாய்ப்பு கிடைத்தப் பருவம். அப்பாவின் தோள்களை எட்டும் நாள் தூரத்தில் இல்லாத தைரியம். சினிமாவுக்கு நெருக்கமான காதல் எங்களுக்கு விருப்பமானது இப்பொழுது நினைக்கையில் இயல்பென்றே தோன்றுகிறது.

ஆளுக்கு ஒரு நாயகி தேடுவோம். பின்பு ஆட்டமும் பாட்டமும் குறைவின்றி குதூகலிப்போம். வில்லன்களை விரட்டுவோம். மனதில் நினைத்த மங்கையை மாலையிட்டு மகிழ்வோம். பெற்றோர் தடுத்தால் போராடுவோம். முடியாமற்போனால் முறித்துக்கொள்வோம் உறவை....... பெற்றோருடன்!

இதுவேப் பள்ளியில் பலரது ஸித்தாந்தம்.

என்னுடையது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. வேறொரு சமையம் சொல்கிறேன்.

அந்தப் பெண் எங்களுக்கு இரண்டு வயது இளையவள். சற்றுமுன் பூத்த வெளிர் அரளியின் நிறம். எப்பொழுதும் தித்திப்பான புன்னகையைத் தாங்கி வரும் அதிமதுரம் அவளதரம்! அந்தக் கன்னங்கள்..........நிற்க! அவள் நண்பனின் காதலி! :-)
வர்ணணை முற்றிற்று!

நண்பர்களுக்குக் காதல் வரிகள் தேடித்தருவதில் தான் எத்தனைப் பெருமை. இவர்களின் காதல் தான் எத்தனை புனிதம். அன்று தான் பாரதி காதல் கவிஞனாய் எனக்கு அறிமுகமானான்.

(அதே) நண்பனின் (அதே)காதலி பள்ளி விழாவில் நடனமாட, ஒத்திகையின் போது யாரோ ஏதோ கொடுஞ்சொல் கூறியதன் பொருட்டு அழுது கொண்டே அன்று ஒத்திகை பார்த்ததும், அதை சிறிதும் பொருக்கவியலாத காதல் நெஞ்சன், என்னுயிர் நண்பன் மேடையின் கீழே நின்றுக் கண்ணீர் மல்க உறுகியதும், காலத்தால் அழியாத காவியம்.

அருகிலிருந்த நான்

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி"

என்று பாடி கண்ணடிக்க, இரண்டு மணி நேரம் அவன் அதையே உச்சறித்துக் கொண்டிருந்தது வேடிக்கை.

மேடையில் ஒலித்துக் கொண்டிருந்த "செந்தமிழ் நாடெனும் போதினிலே!" எங்களுக்கு அந்நியமானது இயற்கை தானே? :-)

இப்பொழுது பாரதியும் என் பக்கம். :-) நான் இயற்கையை பாடவில்லை என்று வருந்த யாருமில்லை. காதல் இயற்கை, காதல் மட்டுமே இயற்கை, மற்றவை அவற்றின் பிம்பம். காதலின்றி நிலவு கசக்கும், வானம் கருக்கும், மழை எரிக்கும், மலர்கள் ??? பயனிழக்கும். சரிதானே? ;-)

தொடர்வேன்!

Part1

2 comments:

bhupesh said...

Super OB! irunthaalum.....feeding the wolf....so, forgiven :)

ramkay said...

naalla eluthiree daa neee... valargaa unathuu blogg... :)